Wednesday, September 26, 2012

Night Bike Race in Salem City

Share
Night bike race
சேலம், சாரதா கல்லூரி சாலையில், கார், மொபெட் ரேஸ், "கொலை' கட்டுகிறது. இதில் கலந்து கொள்ளும் இளைஞர்கள், 150 சி.சி., வாகனங்களை இயக்குவதால், சாரதா கல்லூரி சாலை, கொலை களமாக மாறி வருகிறது.

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் மத்தியில், கார், மொபெட் ரேஸ் நடத்தி, லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டும் பணியில், ஒரு ரவுடி கும்பல் களம் இறங்கி உள்ளது. இதற்காக, பண வசதியை கொண்ட தொழில் அதிபர்களின் மகன்களை வளைத்துப் போட்டு, அவர்களை, இந்த, "பெட்டிங் ரேசில்' களம் இறக்கி உள்ளது. சாரதா கல்லூரி சாலையில், எல்.ஆர்.என்., ஓட்டல் அருகே துவங்கி, ஏற்காடு அடிவாரம் முருகன் கோவில் வரை, அதே இடத்தில் துவங்கி, பெங்களூரு பை-பாஸ் சாலையில் உள்ள, சுங்கச் சாவடியை எல்லையாக கொண்டு, ரேஸ் நடத்தப்படுகிறது.

இதற்காக, ஒரே நேரத்தில், ஐந்து டூவீலர்களை பங்கேற்க செய்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் இளைஞர்கள், ஒவ்வொரு வண்டிக்கும், நுழைவுக் கட்டணமாக, 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்.மொத்தம், 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் இந்த கும்பல், முதலாவதாக வந்து வெற்றி பெறுபவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குகின்றனர். தினமும், குறைந்தது, ஆறு முறை டூவீலர் ரேஸ் நடத்தப்படுகிறது. ஒரு முறை நடத்தினால், 15 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம்.

கார் ரேஸ் எனில், ஸ்கார்பியோ கார் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ரேசில், மூன்று வாகனங்கள் பங்கேற்கின்றன. இதற்கு நுழைவுக் கட்டணமாக, 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். முதலில் வரும் வாகனத்துக்கு, வெற்றி பெற்றதாக, 20 ஆயிரம் வழங்குகின்றனர். கார் ரேஸ், மூன்று முறை நடத்தப்படுகிறது. ஒரு முறை ரேஸ் நடத்தினால், ரவுடி கும்பலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.தினமும், இரவு, 7:00 முதல், 9:00 மணி வரை ரேஸ் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் வாகனங்கள், குறைந்தபட்சம், 150 சி.சி., இருக்க வேண்டும்.

இந்த ரேஸ் நடத்தப்படுவது, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தெரியாததால், அவர்கள் வழக்கம்போல், சாரதா கல்லூரி சாலை, ஏற்காடு சாலை, பெங்களூரு பை-பாஸ் சாலையில் செல்கின்றனர்.சாலையில் நடந்து செல்பவர்கள் மீது, ரேசில் கலந்து கொள்ளும் வாகனங்கள் மோதி, விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன், ரேஸ் வாகனம், இரண்டு பேர் மீது மோதியதில், அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் போலீசில் புகார் கொடுக்க முயன்றபோது, ரேஸ் கும்பலின் அதிகார பலத்தால், போலீஸ் ஸ்டேஷனில், புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கடந்த வாரம், சாரதா கல்லூரி சாலையில், கந்தசுவர்ணா காம்ப்ளக்ஸ் அருகே, ஆட்டோ மீது ஸ்கார்பியோ கார் மோதியது; இதில், ஆட்டோ தூக்கி எறியப்பட்டது.ரேஸ் நடத்தும் ரவுடி கும்பல், போலீசாருக்கு மாமூல் வழங்குவதால், இது போன்ற விபத்துகள் குறித்த புகார்களை, போலீஸ் ஸ்டேஷன்களில் பெற மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ரேஸ் நடத்தும் நேரத்தில், போக்குவரத்து சிக்னல்கள் இயங்குவதில்லை. இது, ரேஸ் கும்பலுக்கு ஆதரவாக, போலீசார் செயல்படுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது:சேலத்தில் தற்போது ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறிப்பு, நில அபகரிப்பு, கிளப்புகளில் சூதாட்டம் ஆகியவை, கட்டுப்படுத்தப்பட்டு விட்டன. ரவுடிகள் பணம் சம்பாதிக்கும் வகையில், இளைஞர்களை பயன்படுத்தி, "டூவீலர்', கார் ரேஸ் நடத்துவதாக, எங்களுக்கு தகவல் வந்துள்ளது.இந்த ரேஸ், சாரதா கல்லூரி சாலையில் நடத்தப்படுவது, முதல் கட்ட ரகசிய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இளைஞர்களை பயன்படுத்தி, ரேசில் ஈடுபடும் ரவுடி கும்பலை விரைவில் கூண்டோடு வளைப்போம். அதற்கான பணிகளை துவக்கி விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ரவுடிகளை களையெடுப்பதில் முனைப்பு காட்டி வரும், சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாலி, ரேஸ் நடத்தும் ரவுடி கும்பலை, கூண்டோடு கைது செய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Wednesday, September 26, 2012 by deivam P Mohanraj · 0

0 Responses to “Night Bike Race in Salem City ”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint