Monday, April 18, 2011

Vadivelu gave an explanation for not criticising Jayalalitha in his election campaign

Share


சென்னை: ஜெயலலிதாவை நான் தேர்தல் பிரச்சாரத்தில் திட்டவே இல்லை என்பது உண்மைதான். காரணம் திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றிப் பேசினாலே போதும் என முதல்வரும் துணை முதல்வரும் கூறிவிட்டனர், என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறினார்.


திமுகவின் பிரச்சார ஹீரோ என துணை முதல்வர் முக ஸ்டாலினால் வர்ணிக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு. முன்னணி தலைவர்களுக்குக் கூட சேராத கூட்டம் இவருக்குக் கூடியது.

இவரது நக்கல், நகைச்சுவைப் பேச்சை ஆரவாரத்தோடு ரசித்தனர் மக்கள். விஜயகாந்தை விமர்சிப்பதாகக் கூறி சில சமயங்களில் வரம்பு மீறிப் பேசினாலும் அதை பலரும் பொருட்படுத்தாலும் ரசித்தனர்.

அதேநேரம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எந்த கூட்டத்திலும் அவர் விமர்சித்து பேசவில்லை. இந்த விஷயத்தில் பாக்யராஜ், குஷ்பு பேசியதில் ஒரு சதவீதம் கூட ஜெயலலிதாவை வடிவேலு விமர்சிக்கவில்லையே என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து வடிவேலு அளித்த பேட்டியில், "தேர்தல் பிரசாரத்தில் எனது பேச்சை கேட்க பெரும் கூட்டம் கூடியது. மக்கள் அளித்த வரவற்பு இனிமையான அனுபவமாக இருந்தது. இதை விட ஒரு கலைஞனுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் எதுவுமில்லை.


அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வரும் கருத்துக் கணிப்புகளை நான் பொருட்படுத்தவில்லை. தேர்தலில் உறுதியாக தி.மு.க. அமோக வெற்றி பெறும். கலைஞர் மீண்டும் முதல்வர் ஆவார். எனது தேர்தல் பிரசாரம் கலைஞருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஏன் தாக்கவில்லை...

கூட்டங்களில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லையே என்று கேட்கிறார்கள். தி.மு.க. அரசின் திட்டங்கள் பற்றி பிரசாரத்தில் பேசினாலே போதும் என முதல்வரும், துணை முதல்வரும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனது பேச்சும் அதை ஒட்டியே இருந்தது.

விஜயகாந்த் மீது தாக்குதல் ஏன்?

விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசுவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவர் நடித்த படம் ஒன்றில் நான் காமெடி வேடம் செய்தேன். ஒரு காட்சியில் விஜயகாந்தைப் பார்த்து வருங்கால முதல்வர் என்று வசனம் பேசச் சொன்னார்கள்.

நான் அவ்வாறு பேச முடியாது என்று மறுத்து விட்டேன். அன்று முதல் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அதன் பிறகு நடந்த மோசமான நிகழ்ச்சிகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.

இப்போது எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர்கள் யார் என்று தெரியவில்லை. முதல்வர் கலைஞரிடம் இந்த மிரட்டல்கள் பற்றி கூறினேன். அவர் எனது வீட்டில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்," என்றார்.
Monday, April 18, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Vadivelu gave an explanation for not criticising Jayalalitha in his election campaign”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint