Showing posts with label Kitchen Samayal Tips. Show all posts
Showing posts with label Kitchen Samayal Tips. Show all posts

Thursday, August 30, 2012

அருமையான வீட்டுக் குறிப்புகள்! -Samayal tips

ருசியாகவும், மணக்க மணக்க சமைப்பதற்காகவும், சமைக்கும் முன்பும் பின்பும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அருமையான டிப்ஸ்...
* தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.
samayal tips
* இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.
* தயிர் வடை செய்யும் போது வடையை பொரித்ததும், அதை சில நிமிடங்கள் தண்­ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.
* ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீ ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.
* இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.
* முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.
* கட்லெட் செய்யும் போது, அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்­ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.
* கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.
* வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.
* உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது, சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
* உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்­ணீர் அதிகமாகி விட்டதா? அதில், சிறிது பச்சரிசி மாவைத் தூவினால் தண்­ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.
* உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.
* பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.
* மோர் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
Kitchen tips

* கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்குத் தேவையானதை, முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.
* தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.
* தோசை மாவில் வெந்தயப் பொடி சிறிதளவு சேர்த்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும்.
* மிளகாயை வறுத்து பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், அவை கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.
 * வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் பயன்படுத்தினால், வாசனை நன்றாக இருக்கும்.

பட்டுப் புடவை, நகை பராமரிப்பு! Saree Maintenance

அதிக விலை கொடுத்து வாங்கப்படும் பொருட்களுக்கு கொஞ்சம் கவனமும் அதிகம் தேவைப்படுகிறது. பட்டுச் சேலைகளை வாங்குவதில் காட்டும் அக்கறையை காட்டிலும் அதை பராமரிப்பதில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது!

Pattu Saree

அரை டம்ளர் தண்­ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்­ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.
குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்துத் துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.
Kanchipuram Collection sarees

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீ­ரில் கழுவினால் போதுமானது.

விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுச் சேலையை களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது.
நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீ­ர் விட்டு அலசினாலே போதுமானது.
ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீ­ர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி 5, 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீ­ர் விட்டு அலச வேண்டும்.
பட்டுப்புடவைகளை வருடக் கணக்கில் தண்­ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்­ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.
அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.
 
பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப் பையில் வைக்கலாம்.

சமையலறையில் பாத்திரங்கள் பளபளக்க...

உங்கள் வீட்டில் வெள்ளை அடித்தாலோ அல்லது பெயிண்ட் அடித்தாலோ ஒரு வாரத்துக்கு அந்த வாசம் போகாது. அந்த அறைகளில் நறுக்கிய வெங்காய துண்டுகளை போட்டு வையுங்கள். பெரும்பாலும் அறைகளின் கதவை மூடி வைத்திருந்தால் ஒரே நாளில் பெயிண்ட் வாடை ஓடியே போய்விடும்! 
lady washing dishes in kitchen

காலையில் அரக்கப் பறக்க வேலைக்கு செல்பவர்கள், இரவு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பாத்திரங்கள் முழுவதையும் தேய்த்து சுத்தப்படுத்தி விடவும். இல்லாவிட்டால் காலையில் பாத்திரம் தேய்ப்பது ஒரு இமாலய வேலையாகத் தெரியும்.
முட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால்... அதன் மேல் உப்பு போடவும். சிறிது நேரத்துக்குப் பின்னர் துடைத்துவிட்டால் சுத்தம் செய்வது எளிது. வாடையும் இருக்காது.
அசைவ உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்த பிறகும், வாசனை போகாது. வாஷிங் லோஷன் இல்லாவிட்டால் பவுடர் போன்றவற்றை ஓவனில் கொஞ்சநேரம் வைத்து எடுங்கள். உணவின் வாசனை போயே போச்...!
விளக்கெண்ணை, கடலை எண்ணை, இலுப்பை எண்ணை ஆகிய மூன்றையும் கலந்து விளக்கு ஏற்றினால், நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணையும் குறையாது. ஆடைகளில் எண்ணைக் கறை பட்டு விட்டால் கவலை வேண்டாம். அதன் மீது சிறிது ஆல்கஹாலை தேய்த்துவிட்டு அப்புறம் துவைத்தால் கறை போய்விடும்.
வாஷிங் மெஷினில் துணியை போடும்போதோ அல்லது அழுக்கு துணிகளை வாளியில் உள்ள சோப்பு நீரில் ஊற வைக்கும்போதோ அதனுடன் சிறிதளவு ஷாம்பு சேர்த்தால் துவைக்கும் துணிகள் காய்ந்த பிறகும் கமகம வாசனையாக இருக்கும்.
சமையலறை மேடை மீதும், கப்போர்டுகள் மீதும் அடிக்கடி அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறையாவது நன்றாக துடைத்தால் தான் சுத்தமாக இருக்கும். இதற்கு எளிய வழி உண்டு. சமையலறை மேடை மற்றும் கப்போர்டுகள் மீது பாலிதீன் பேப்பர்களை ஒட்டி வைத்து வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.
பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.
தினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் வெந்நீர் வைக்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். குக்கரையே காஸ்கட் போடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தால் சிக்கிரமே சூடாகி விடும். அதேபோல், இளஞ்சூடான நீரில் துணிகளை துவைத்தால் எளிதில் அழுக்கு போய்விடும்.
உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறதா? அப்படி என்றால் ஒரு சின்ன ஐடியா... உங்களுடைய செல்லத்தை டிவி அறையில் உட்கார வையுங்கள். அல்லது அதன் அருகில் ரேடியோவை பாட விடுங்கள். யாரோ பேசுவதாக நினைத்து கொஞ்ச நேரம் குரைத்து விட்டு அமைதியாகி விடும்.
ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் "பிளீச்சிங் பவுடரை" கரைத்து, அதில், கரை படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.
அதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.
பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.
எலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், சோப்பு பவுடருடனோ, சபீனாவுடனோ கலந்து பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடலை மாவுடன் கலந்து வைத்து, உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.
டீ, காபி கரை உள்ள பாத்திரங்களில், சிறிதளவு உப்புத் தூளைத் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துப் பின் கழுவினால் கரை நீங்கும்.
முட்டை, வெங்காயம், பூண்டு சமைத்த பாத்திரங்களில் ஏற்படும் வாடை நீங்க, பாத்திரத்தில் உப்பு போட்டு தேய்த்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
எண்ணெய் வைக்கும் பாத்திரங்களில் பிசுக்கு வாடை நீங்காமல் தொல்லை கொடுக்கும். சிகைக்காய்ப் பொடியால் தேய்த்துக் கழுவி, பிறகு எலுமிச்சைத் தோல் பொடியைத் தேய்த்தால், வாடை நீங்கி, பாத்திரம் பளபளக்கும்.

பிசுக்கு நிறைந்த பாத்திரத்தைச் சுத்தம் செய்ய, கடலை மாவு கூட பயன்படும். கடலை மாவை பாத்திரத்தில் தூவி, வழித்து எடுத்தால் ஓரளவு பிசுக்கு நீங்கும். அதன் பின், சிகைக்காய் பொடி போட்டு தேய்க்கலாம்.

மின்சாரத்தை மிச்சப்படுத்த சில வழிமுறைகள்... how to reduce power consumption in home

மின்தடை ஒரு பக்கம் படுத்துகிறது என்றால், பல குடும்பத் தலைவர்களை மின்சார பில்லும் பயமுறுத்துகிறது. அதிலும் வீட்டுக்கு ஓர் அளவாக இருக்கும் வாடகை வீட்டு பரிதாப மனிதர்களை. ஆனால் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் கொஞ்சமே கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இ.பி. பில் "இனிய அதிர்ச்சி" தரும்.
மின்சாரத்தை மிச்சம் பிடிப்பது எப்படி? இதோ வழிமுறைகள்...
வீட்டில் அதிக மின்சாரத்தைச் சாப்பிடுபவை ஃப்ரிஜ், எலக்ட்ரிக் கீசர், மைக்ரோவேவ் ஓவன், ஏர்கண்டிஷனர் போன்றவை.
24 மணி நேரமும் ஓடிக் கொண்டே இருக்கும் ஃப்ரிஜ், இ.பி. பில்லில் 10 சதவீதத்துக்குக் காரணமாகிறது.
Power Consumption
ஹீட்டர்:
* ஹீட்டர் டேங்க் நன்றாக "இன்சுலேஷன்" செய்யப்பட்டிருக்க வேண்டும். வெந்நீர் உள்ள நிலையில் டேங்கின் வெளி வெப்ப நிலையைப் பாருங்கள். அது சாதாரண அறை வெப்பநிலையில் இருந்தால் டேங்க் நன்றாக இன்சுலேஷன் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றவாறு "தெர்மோஸ்டாட்"டை "செட்" செய்யுங்கள். 60 டிகிரி செல்சியஸ் என்பது பெரும்பாலானோருக்கு ஏற்றது.
* கீசரை தேர்வு செய்வதில் புத்திசாலித்தனமாக இருப்பது நல்லது. உடனடியாகச் சூடாகும் கீசர்கள் மிகவும் வசதியானவைதான். ஆனால் ஏராளமான மின்சக்தியை எடுத்துக்கொள்ளும். நவீன கியாஸ் கீசர்களை தேர்வு செய்துகொள்ளலாம். சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர்கள் சுற்றுச்சூழலுக்கு இயைந்தவையாக வெந்நீரை அளிக்கும். ஒரு கீசரை "ஆன்" செய்வது, 75 டியூப் லைட்களை எரிய விடுவதற்குச் சமம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஃப்ரிஜ்:
பெரும்பாலான ஃப்ரிஜ்களில் குளிர், அதிக குளிர், மிக அதிகமான குளிர் என்ற வகையில் "செட்டிங்" இருக்கும். ஆனால் ஃப்ரிஜுக்கு பிரீஸரிலும், மற்ற பிரிவுகளில் இயல்பான வெப்பநிலை எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டிருக்காது. ஃப்ரிஜ்ஜினுள் அதிகமான குளிரோ, குறைவான குளிரோ உள்ளே வைக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தைப் பாதிக்கும். ஒவ்வொரு கூடுதல் குளிர்ச்சிக்கும் 5 சதவீதம் கூடுதல் மின்சாரம் செலவாகும். பிரீசர் அல்லாத பகுதிகளில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை போதுமானது. ஃப்ரிஜ்ஜின் மின்சாரத்தைப் பயன்படுத்தும் திறனை அறிய இந்த வெப்பநிலை அளவை நாம் அளவிட வேண்டும்.
* பயன்படுத்தப் பயன்படுத்த ஃப்ரிஜ் கதவின் "காஸ்கெட்" தளர்வாகி, காற்றுக் கசிவுக்கு வழிவகுக்கலாம். கதவைச் சாத்தி இடையில் ஒரு காகிதத்தைச் செலுத்திப் பாருங்கள். காகிதத்தை எளிதாக நுழைத்து எடுக்க முடிந்தால் "காஸ்கெட்"டை மாற்ற வேண்டும் என்று அர்த்தம்.
* "பிராஸ்ட் பிரீ" இல்லாத ஃப்ரிஜ்களின் பின்புறத்தில் கம்பித்தடுப்பு இருக்கும். இதில் தூசி படியும். சிலந்தியும் வலை பின்னலாம். இது பிரிஜ்ஜின் மின்சக்தி பயன்படுத்தும் திறனைப் பாதிக்கும். சுவரிலிருந்து போதுமான இடைவெளி விட்டு ஃப்ரிஜை வைப்பதும் முக்கியம்.
ஏர்கண்டிஷனர்:
* சிலர் சிலவேளைகளில் ஒரே நேரத்தில் ஏ.சி.யையும் மின்விசிறியையும் பயன்படுத்துவார்கள். இதனால் ஏ.சி.யால் போதுமான அளவுக்குக் குளிர்விக்க முடியாது. மின்சாரம்தான் வீணாகும்.
* கதவுகள், ஜன்னல்களில் இடைவெளி இருந்தால் வெளி வெப்பக்காற்று உள்ளே வந்து, ஏ.சி. கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மின்சக்தியும் கூடுதலாகச் செலவாகும்.
* ஏ.சி. அறையில் ஃப்ரிஜ் அல்லது அதிக வாட் விளக்குகள் இருப்பது மேலே குறிப்பிட்ட பாதிப்பையே ஏற்படுத்தும். ஏ.சி. வெப்பநிலை அளவு, வசதியான 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு "செட்" செய்யப்பட வேண்டும்.
* ஏ.சி.யில் உள்ள "ஏர் பில்டரை" அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். ஏ.சி.யைப் பயன்படுத்தாதபோது ஜன்னல்களைத் திறந்துவிட்டு வெளிக்காற்று உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.
விளக்குகள்:
* சாதாரண குண்டு பல்புகளுக்குப் பதில், வெண்ணிறத்தில் சுருள் சுருளாக உள்ள "சி.எப்.எல்." விளக்குகளைப் பயன்படுத்தலாம். இவை சற்று விலை அதிகம் என்றாலும் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும். குண்டுபல்புகளில் 8 முதல் 10 சதவீத மின்சாரம்தான் வெளிச்சமாக மாற்றப்படுகிறது. பாக்கி 90 சதவீத மின்சக்தி வெறும் வெப்பமாகத்தான் வீணாகிறது.
* விளக்கு வெளிச்சத்தைக் கூட்ட, குறைக்க உதவும் "டிம்மர்கள்" இருந்தால், தேவையான அளவுக்கு மட்டும் வெளிச்சத்தை வைத்து மின்சார செலவைக் கட்டுப்படுத்தலாம்.
* டியூப் லைட்களில் "எலக்ட்ரானிக் சோக்"குகளை பயன்படுத்தினால் மின்சக்தி பயன்பாட்டைக் குறைப்பதோடு, நல்ல வெளிச்சத்தையும் பெறலாம்.
வயர்கள்:
பழைய அல்லது ஒழுங்கற்ற "வயரிங்" காரணமாக மின்கசிவு ஏற்படக்கூடும். இதுவும் மின்சார பில் அளவைக் கூட்டும். வீட்டில் மின்கசிவு இருக்கிறதா என்று அறிய அனைத்து மின்சாதனங்களையும் விளக்குகளையும் அணைத்துவிட்டு மெயின் சுவிட்ச் மீட்டர் ஓடுகிறதா என்று பாருங்கள். அது ஓடினால் மின்கசிவு இருக்கிறது, கவனிக்க வேண்டும் என்று அர்த்தம்.
பழைய உபகரணங்கள்:

பலருக்குப் பழைய வீட்டு உபயோக உபகரணங்களை மாற்ற மனம் வராது. ஆனால் சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் உபகரணங்கள் நவீனத் தொழில்நுட்பம் கொண்டவையாக, சுற்றுச்சூழலுக்கு இயைந்தவையாக, குறைவாக மின்சக்தியைப் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும். இன்றைய "லேட்டஸ்ட்" ஃப்ரிஜ், 1980-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஃப்ரிஜ்ஜை விட குறைவாகவே மின்சாரத்தை உபயோகிக்கும். எனவே பழையதை ஒதுக்கிவிட்டு புதிதாக வாங்குவதே புத்திசாலித்தனம்.

சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற...! Happy kitchen room



சமையலறை என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது... அழுக்கடைந்த சுவரும்... ஆங்காங்கே பாத்திரங்களும்... அப்படிப்பட்ட சமையலறையை, சந்தோஷமான இடமாக மாற்ற... சில டிப்ஸ் இதோ...
சுத்தமான சுவர் அவசியம். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும் சேர்ந்து அடுக்களை சுவர் மேலும் அழுக்காகிறது. இதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல் செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு. சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது தானே. மேலும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொள்ளவும். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன அறையும் பெரியதாகத் தெரியும்.
அடுத்து நல்ல அடுப்பு...! அடுப்பு வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது என்று வாங்காமல்... விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி நிறைந்த அடுப்புகளை வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும் சூழலில் ஆர்வம் அதிகமாகும். சமையலறைக்கு முகம் போல அடுப்பு இருப்பதால் அது அழகாக இருந்தால்... சமையலறையே மிகவும் அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும், 50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா சுற்றுச்சூழலும் உருவாகும்.
பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே... அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
வேலைக்கு செல்லும் பெண்கள், வேகமாக... சுவையாக... சத்தான உணவாக தயாரிக்க வேண்டும். சமையலறையில் ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது. அதனால் ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகளை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தைகள் வேலையில் ஈடுபடும். குழந்தைகளுக்குள் சண்டை போடும் வாய்ப்பும் குறையும்.
Happy kitchen

அப்படி சமையல் வேலைகளை சொல்லும்போது சிறுமிகளுக்கு மட்டுமே சமையல் வேலைகள் என்று கொடுக்காமல் இருவருக்குமே அனைத்து வேலைகளையும் கொடுக்கலாம்.
இப்படி கொடுக்கப்படும் வேலைகளை குழந்தைகள் செய்ய யோசித்தால், உடனே உங்களுடைய கணவரை அழைத்து அந்த வேலைகளை செய்யச் சொல்லலாம். அப்படி அவர் செய்யும்போது, "அப்பாவே செய்யும்போது, நாமும் செய்தால் என்ன?" என்ற நினைப்பு, அவைகளுக்கு தோன்றும். சமையல் மட்டுமின்றி தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சமையலில் பருப்பை வேக வைக்கும்போது, அதிக நேரம் வேகிற காய்கறிகளை குக்கரில் வைத்து வேக வைக்கலாம். இட்லி வேக வைக்கும்போது, முட்டையையும் சேர்த்து வெக வைத்தால் எரிசக்தி, நேரம் எல்லாமே மிச்சமாகும்

சிறு துளி பெரு வெள்ளம்! - Kitchen Tips

எவ்வளவு வருமானம் உள்ளவருக்கும் சிக்கனம் என்பது நன்மை தரும். வீட்டுக்குள் 'இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது?' என்று நாம் நினைக்கும் விஷயங்கள் சிறுகச் சிறுகச் செலவைக் கூட்டும். 'சிறு துளி பெரு வெள்ளம்' என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.
வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில 'டிப்ஸ்' இங்கே...
Tap Water drops

* வழக்கமான குண்டு பல்புகளுக்குப் பதிலாக 'காம்பாக்ட் புளோரசன்ட் விளக்கு'களைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது அனைத்து விளக்குகளையும், மின் உபகரணங்களையும் அணைக்க மறக்காதீர்கள்.
* 'சார்ஜர்களை' அணைத்து விடுங்கள். அவை 'சார்ஜிங்' செய்யாவிட்டாலும் மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.
* பாத்ரூமில் ஷவரில் குறைவாகத் தண்ணீ­ர் விழுமாறு அமைத்துக்கொள்ளுங்கள். அது தண்­ணீர் சிக்கனத்துக்கு உதவும். நீங்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது ஷவரில் தண்ணீ­ர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
  
* பாத்ரூமில் முகம், கை துடைக்க, பயன்படுத்தித் தூக்கியெறியும் 'டிஸ்யூ பேப்பருக்கு' பதிலாக துண்டையே பயன்படுத்தலாம்.
* 'இங்க் கேட்ரிட்ஜ்', 'சிடிக்கள்', 'டிவிடிக்கள்' போன்ற கணினி பயன்பாட்டுப் பொருட்கள் பெரும்பாலானவை மறு பயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு வயர்கள், 'ஸ்பீக்கர்கள்' போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
* துணிகள் அல்லது பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்போது மட்டும் 'வாஷிங் மெஷின்' அல்லது 'டிஷ் வாஷரை' பயன்படுத்துங்கள். ஆனால் கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், 'ஹாப்- லோடு' அல்லது 'எகானமி செட்டிங்'கை அமைத்துக் கொள்ளுங்கள்.
* 'ஏசி' இருந்தால் அதன் 'ஏர் பில்டரை' மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள்.
* எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் 'பிளக்'கை மாட்டியே வைத்திருக்காதீர்கள்.
* புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது அவை மின்சக்தியை சேமிக்கும் திறன் பெற்றவை என்பதற்கான 'எனர்ஜி ஸ்டார் லேபிளை' பார்த்து வாங்குங்கள்.
* மின் சக்தியை அதிகமாகச் 'சாப்பிடும்' பழைய உபகரணங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள்.
* தண்­ணீரைச் சுட வைப்பதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழியைப் பாருங்கள்.
* எங்காவது தண்­ணீர் கசிந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்து உடனே சரிசெய்யுங்கள்.
All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint