Friday, July 8, 2011

லட்சம் கோடி பொக்கிஷங்கள் வந்தது எப்படி?... ஏழுமலையானை விஞ்சிய பத்மநாபர்...

Share



திருவனந்தபுரம்: திருப்பதி ஏழுமலையானை சொத்து மதிப்பில் மிஞ்சிய பத்மநாபர் கோயிலுக்கு லட்சம் கோடிகளை தாண்டும் இந்த பொக்கிஷங்கள் குவிந்தது எப்படி என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒருங்கிணைந்த இந்தியாவில் குறுநில மன்னர் சமஸ்தானங்கள் சேர்க்கப்பட்டபோது, 1949 ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானமும் சேர்க்கப்பட்டது. தெற்கில் கன்னியாகுமரி, வடக்கே எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வரை நீண்டிருந்தது. தமிழ்நாட்டின் பத்மநாபபுரம் தான் அப்போது அதன் தலைநகராக இருந்தது. பின்னர் தான், திருவனந்தபுரமாக மாற்றப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தான முதல் மன்னர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. அவருக்கு பின் கார்த்திகை திருநாள் ராம வர்மா ஆட்சி செய்தார். அப்போது தான் திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாறியது.

1750 ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆரம்பித்தபோதே, அரசாட்சியும், பத்மநாபர் கோயிலும் இணைந்தே இருந்தது. முதல் மன்னர், என் சொத்துக்கள் எல்லாம் பத்மநாபருடையது. நான் அவருடைய சேவகன்’ என்று அறிவித்து தன் பெயரை பத்மநாப தாசர் என்றும் மாற்றிக்கொண்டவர். கடந்த 1813 ல் இருந்து 1846 வரை ஆண்ட, சுவாதித்திருநாள், பிரபலமான கர்நாட இசை கலைஞராக இருந்தவர். ஆங்கில மொழி பற்று கொண்டவர். 1921 1992 ல் வாழ்ந்த கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா தான் இந்தியாவில் மரண தண்டனையை ஒழித்த முதல் சமஸ்தான மன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1936ல், திவானாக இருந்த சி.பி.ராமசாமி அய்யர் யோசனைப்படி, தீண்டாமையை ஒழித்து, கோயிலுக்குள் எல்லாரும் போய் தரிசிக்க வைத்தவரும் இவர் தான்.

பத்மநாபர் கோயிலுக்கு தங்கள் சொத்துக்களை அப்படியே தந்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் என்பதை பல மலையாள இலக்கியங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் குறித்து, 1941 ல் கவிஞர் பரமேஸ்வர அய்யர் தன் பிரதானபட்டா மதிளகோம் பதிவேடுகள் என்ற புத்தகத்தில் குறிப்புகளை எழுதியுள்ளார். இதுபோல, கொட்டாரம் (அரண்மனை) மானுவல் 12 பகுதிகள் அடங்கியது. அவற்றில், பொக்கிஷங்கள் குறித்து குறிப்புகள் உள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் சசிபூஷண். திருவிதாங்கூர் பரம்பரையில் முதல் மன்னர் முதல் கடைசி மன்னர் மட்டுமல்ல, இப்போதுள்ள வாரிசுகள் வரை, சொத்துக்கள் பற்றி கணக்கில் தெளிவாக இருந்துள்ளனர். கோயிலுக்கு தந்தபின், சொத்துக்களை கட்டிக்காத்து வந்துள்ளனரே தவிர, அவற்றில் இருந்து செலவு செய்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்மநாபர் கோயிலுக்கு எல்லா சொத்துக்களையும், தங்க, வெள்ளி நகைகள், பொருட்களை தந்தபின், அவற்றை பாதுகாத்து வந்த சமஸ்தான மன்னர்கள், கோயில் நிர்வாக செலவுக்கு , ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட நறுமணப்பொருட்கள் விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து தான் எடுத்துக்கொண்டுள்ளனர் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. திருவிதாங்கூர் பரம்பரை குடும்பத்தின் தலைவராக இப்போது இருப்பவர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. இதுவரை இருந்த அரச பரம்பரை மன்னர்களை போலவே, அவரும் எளிமையானவர். கோயில் விஷயத்தில் தலையீடு செய்ததில்லை. கோயிலில் லட்சம் கோடிகளை தாண்டி, பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் மவுனம் கலைப்பதை தான் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
Friday, July 8, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “லட்சம் கோடி பொக்கிஷங்கள் வந்தது எப்படி?... ஏழுமலையானை விஞ்சிய பத்மநாபர்...”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint