Friday, July 15, 2011
Nice Article : கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் Karunanidhi
History of M.Karunanidhi by Nedumarn
மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். "எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது. "பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன். ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.
1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.
எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். 1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.
ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர். ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர்.
அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை.
எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை. இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை.
இப்போது இளம் நடிகர்கள் அஜித்,விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே! கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள்.
அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள். நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள். 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.
பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.
1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார். அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்? நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்? தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா? இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா? முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான்.
அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே! உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன. திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை.
நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது. ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள்.
ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை. உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.
மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு? கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள். பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா? ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்? ""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்''
To View Karunanidhi Cine awards l Karunanidhi audio lauch Click Here
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
Labels
Cinema
(92)
TN News
(73)
TN Election
(70)
India News
(59)
world
(42)
Blogger Tricks Tips
(25)
Astrology
(17)
Health Tips
(17)
Health Tips in Tamil
(15)
God
(13)
Ajith
(12)
Articles
(11)
Relationship
(11)
Salem Yellow Pages
(11)
Software
(11)
Sports
(10)
Firefox Google Internet ExploreYahoo
(9)
Internet Problems
(9)
MP3 SONGS
(9)
deivam P Mohanraj
(9)
GK
(8)
Games
(8)
Links
(8)
Healthy Foods
(7)
Kitchen Samayal Tips
(6)
Result
(6)
Airtel Vodofone Idea Bsnl
(5)
TNPSC
(5)
Bank
(4)
Mp3 and Torrent
(4)
Car
(3)
Computer
(3)
Friendz
(3)
Movie Review
(3)
PC Games
(3)
Sanjith Enterprises
(3)
yahoo mail gmail tips
(3)
Cricket
(2)
Mobiles
(2)
Tricks and Tips
(2)
Andhra
(1)
Art
(1)
Facebook
(1)
HISTORY
(1)
Images
(1)
Indian Recipes
(1)
Kavithai
(1)
Online
(1)
Online Earning
(1)
Tamil
(1)
Thirupathi
(1)
Videos
(1)
0 Responses to “Nice Article : கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் Karunanidhi”
Post a Comment