Tuesday, August 2, 2011

நடிகர் வடிவேலு மீதும் நில அபகரிப்பு புகார் - தலைமறைவு..?

Share

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மீதும், நிலமோசடிக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்துக் கொண்ட நடிகர் வடிவேலு, அந்நிலத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பி உள்ளதாகவும், இது தொடர்பாக நியாயம் கேட்ட தன்னை மிரட்டியதாகவும், முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் புறநகர் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

சென்னை அஷோக்நகரில் வசிக்கும் பழனியப்பன் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் துணை பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2004-ம் ஆண்டு தாம்பரம் முடிச்சூர் ரோட்டில் அமைந்துள்ள 34 சென்ட் நிலத்தை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திடம் வாங்கியுள்ளார். 2006-ம் ஆண்டு கடன் முடிக்கப்பட்டு பழனியப்பன் பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் அந்த இடத்தை வாங்கிக் கொண்ட பழனியப்பன், தனக்குச் சொந்தமான நிலத்துக்குச் சென்று பார்த்தபோது, அந்த இடத்தை சுற்றி சிலர் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளமை தெரியவந்தது. சுவர் எழுப்பியவர்களிடம் இது பற்றி விசாரித்த போது, அந்த இடத்தை நடிகர் வடிவேலு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேற்படி நிலத்தை வடிவேலுவின் மனைவி மற்றும் மகன் சுப்ரமணி பெயருக்குப் போலிப்பத்திரத்தின் மூலம் உரிமமும் பெற்றிருந்தார்கள். இது பற்றி வடிவேலிடம் பேசச் சென்ற பழனியப்பனை, வடிவேலுவின் மேனேஜர் மற்றும் அடியாட்கள் அவரை மிரட்டியதுடன், உன்னால் ஆனதை பார் என்று விரட்டி அடித்துள்ளதாகவும் அவர் தனது புகார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் நடைபெற்ற 2009-ம் ஆண்டிலேயே புறநகர் ஆணையர் ஜாங்கிட்டிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்தும், எதுவித நடவடிக்கை இல்லாததிருந்த நிலையில், தற்போதைய புதிய ஆட்சியில், தமிழக முதல்வர் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதில் ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக மீண்டும் காவல்துறையை அணுகியுள்ளதாகவும் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் வடிவேலுவிடம் விசாரணை மேற்கொள்ள முயன்ற போது அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் தகவல்கள் சில தெரிவிக்கின்றன.

Tuesday, August 2, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “நடிகர் வடிவேலு மீதும் நில அபகரிப்பு புகார் - தலைமறைவு..?”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint